சமீபத்தில் நான் சந்தித்த முதலீட்டாளர் ஒருவர் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கச்செய்தார். அவர் வாரன் பபெட் சொன்னதுபோல் வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக சொன்னார்.
” என்னது? வாரன் பபெட் வீடு வாங்க சொன்னாரா?” என்று கேட்டேன்.
ஆமா சார்! அவர்தானே “எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது” என்று சொன்னார். அதான் மியூட்சுவல் பண்ட்’ல இருந்து கொஞ்ச காச எடுத்து வீட்டை வாங்கி அதை லோன்ல கன்வெர்ட் பண்ணிட்டேன் என்றார்.
எனக்கு தூக்கி வாரி போட்டது.
வாரன் பபெட் அப்படி சொன்னது உண்மைதான், ஆனால் அதன் அர்த்தம் நீங்கள் புரிந்து கொண்டது போல இல்லை.
வாரன் பபெட், அவர் வாழ்நாளில் சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளார். அப்படி அவர் எடுத்த வெற்றிகரமான முதலீடு கோகோ-கோலா கம்பெனியில் 1988 இல் செய்த முதலீடு. அது அவருக்கு மிக பெரிய லாபத்தை கொட்டியது. அவர் செய்த முதலீட்டில் இருந்து பத்து மடங்கு வெறும் டிவிடெண்ட் ஆக மட்டுமே பெற்றுள்ளார்.
இப்படி இருக்கையில், 2010 இல் அவர் CNBC க்கு அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “நீங்கள் கோகோ-கோலா முதலீட்டில் அதிக லாபம் பார்த்துள்ளீர்கள், நீங்கள் ஏன் உங்கள் எல்லா பணத்தையும் கோகோ-கோலா வில் போடவில்லை” என்று.
அதற்க்கு அவர் அளித்த பதில் – ” நான் எனது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடமாட்டேன், நான் என்றுமே ஒரே ஒரு கம்பெனியில் முதலீடு செய்ய முயற்சித்ததில்லை. மாறாக, பல சிறந்த வியாபாரங்களில் முதலீடு செய்யவே முயற்சித்திருக்கிறேன். அதுவே நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபத்தை கொடுக்கும்” என்றார்.
அவர் சொன்ன இந்த உதாரணத்தை நாம் தவறாக புரிந்து கொண்டோம் என்று தான் எண்ணுகிறேன்.
அதற்க்கு முன்னும் ஒரு தடவை வாரன் பபெட் இதே வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். அது 2000 ஆண்டு, பார்ச்சூன் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் நிருபர் ஒரு கேள்வி கேட்டார்.
“கடந்த கால மார்க்கெட்டை வைத்துக்கொண்டு எதிர்கால மார்க்கெட் எப்படி இருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு வாரன் பபெட், ” கடந்த காலம் மீண்டும் எதிர்காலத்தில் ரிப்பீட் ஆகாது. ஆனால் கடந்தகாலத்தில் சுவடுகளை நாம் எதிர்காலத்தில் பார்க்கலாம். அதே சமயம் எதிர்கால மார்க்கெட் வித்தியாசமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை.
கடந்த கால மார்க்கெட் பல சிறந்த லாபகரமான தருணங்களை தந்திருக்கிறது, அதேபோல் மிக மோசமான நட்டத்தையும் தந்திருக்கிறது. அதில் ஒவொரு தருணமும் வித்தியாசமானவை. அதனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் தருணம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது.
அதனாலேயேதான், பிரித்து முதலீடு செய்வது சிறந்த வழியாக இருக்கும் என்று நான் சொல்கிறேன். உங்கள் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டுவிட்டால், ஒரு வேலை அந்த கூடை உடைந்துவிட்டால், நீங்கள் நஷ்டவாதி ஆகிவிடுவீர்கள். ஒரு வேலை நீங்கள் பிரித்து முதலீடு செய்திருந்தால் உங்கள் நஷ்டத்தை குறைக்க முடியும்.
பிரித்து முதலீடு செய்வது நம் கவனக்குறைவில் இருந்து நம்மை பாதுகாக்கும். நாம் என்ன செய்கிறோம் என்று அறிந்த முதலீட்டாளர்களுக்கு பிரித்து முதலீடு செய்வது சற்று போர் அடிக்கும். ஆனால் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை.
ஒருவேளை உங்களுக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியவில்லை என்றால், பிரித்து முதலீடு செய்வதே சிறந்த வழி. அது உங்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும், பெரும் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றும்.” என்றார்.
வாரன் பபெட், சொல்ல வருவது நாம் எண்ணியது போல் இல்லாமல் மார்க்கெட்டில் நாம் எடுக்கும் ரிஸ்க்கை எப்படி குறைப்பது என்பதை பற்றி தான் அதிக நேரம் பேசி இருக்கிறார்.
சில சமயம் என்னிடம் வரும் முதலீட்டாளர்கள், ஒரே மாதிரியான மியூட்சுவல் பண்ட் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யச்சொல்வார்கள். இது தேவையற்றது. நாம் முதலீடு செய்யும் மியூட்சுவல் பண்ட்டே பணத்தை பல நிறுவனங்களில் பிரித்துதான் போடுகிறார்கள்.
சரி, அப்போ வாரன் பபெட் வீடு வாங்க சொல்லவே இல்லையா என்றால். சொல்லி இருக்கிறார்.
CNBC க்கு 2012 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில்.
“வீட்டில் முதலீடு செய்வது ஒரு ‘நல்ல’ முதலீடு தான், ஆனால் ‘சிறந்த’ முதலீடு இல்லை. ஒருவேளை நீங்கள் வீடு வாங்குகிறீர்கள் என்றால் இரண்டு விஷயத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், அந்த வீட்டை வாங்கும் அளவிற்கு உங்களுக்கு சக்தி இருக்கிறதா என்று. இரண்டு, அந்த வீட்டில் நீங்கள் நீண்ட நாள் வாழப்போகிறீர்களா என்று.”