இந்தியப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2024 செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சமான 85,000 புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது. அது அண்மையில் படிப்படியாக இறங்கி 77,500-க்கு சுமார் 10% இறக்கம் கண்டது. தற்போது சற்று ஏற்றத்தில் உள்ளது.
பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள்..~!
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund) திட்டங்களின் என்.ஏ.வி மதிப்பில் பிரதிபலிக்கும். குறைவான என்.ஏ.வி இருக்கும் நிலையில் முதலீடு செய்தால், பின்னர் ஏறும் போது நல்ல லாபம் கிடைக்கும். அண்மை பங்குச் சந்தை இறக்கத்தின் போது பல்வேறு வகை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு 0.80% முதல் 12.40% இறக்கம் கண்டன. இந்தியாவில் லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் தொடங்கி சுமார் 20 வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் உள்ளன.
பங்குச் சந்தை அதிகமாக இறங்கும் போது சில ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி மிக அதிகமாக இறங்கும்; சில ஈக்விட்டி ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு மிக அதிகமாக இறங்காது. இந்த நிலையில் அதிகமாக இறங்கும் ஃபண்டுகளில் கூடுதல் முதலீடு செய்வது அதிக லாபகரமாக இருக்குமா, குறைவாக இறங்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக என்பதில் பல முதலீட்டாளர்களுக்கு குழப்பம் இருக்கிறது.
வீழ்ச்சி எவ்வளவு?
அண்மையில் முன்னணி பங்குத் தரகு நிறுவனங்களில் ஒன்றான வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் (Ventura Securities) ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு கோவிட் பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை குறுகிய காலத்தில் அதிக வீழ்ச்சியை சந்தித்தது. 2020 ஜனவரி மற்றும் மார்ச் இடையே லார்ஜ் கேப் ஃபண்டுகள், மிட் கேப் ஃபண்டுகள் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் பங்குச் சந்தையின் இறக்கத்தால் எந்த அளவுக்கு அதிக இறக்கம் கண்டன. அந்த இறுக்கத்தில் இருந்து எவ்வளவு காலத்துக்குள் மீண்டு வந்தது என்பதை மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் வாரியாக அலசி ஆராய்ந்துள்ளது.
இந்த மூன்று மாதக் காலத்தில் லார்ஜ் கேப் ஃபண்ட் பிரிவை சேர்ந்த நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் மிக அதிகமாக 32.3% இறக்கம் கண்டது. இதேகாலக் கட்டத்தில் ஜே.எம். லார்ஜ் கேப் ஃபண்ட் மிகக் குறைவாக 11.9%தான் இறக்கம் கண்டது.
மிட் கேப் ஃபண்ட் ஆன ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபண்ட் 32% வீழ்ச்சிக் கண்ட நிலையில் அதே வகையை சேர்ந்த ஆக்ஸிஸ் மிட் கேப் ஃபண்ட் மிகக் குறைவாக 18%தான் சரிவை சந்தித்தது.
ஸ்மால் கேப் ஃபண்ட் ஆன ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் 34.3% வீழ்ச்சிக் கண்ட நிலையில் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 16.1%தான் இறங்கியது.
ஈக்விட்டி ஃபண்டுகளின் என்.ஏ.வி இறக்கம் என்பது அந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் (Portfolio) இடம் பெற்றிருக்கும் பங்குகளின் கலவையை பொறுத்து அமைகிறது. போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் விலை மிக அதிகமாக வீழ்ச்சிக் கண்டால் என்.ஏ.வி மதிப்பும் அதிக வீழ்ச்சியை சந்திக்கும்.
மீட்சி காலம்..!
பங்குச் சந்தை முழுமையாக அதன் பழைய நிலைக்கு ஏற்றம் காணாத நிலையில் இறங்கிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மீட்சிக்கு திரும்பி உள்ளன என்பது வென்ச்சுரா ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், குறைவாக இறங்கிய ஃபண்டுகள் விரைவாக மீண்டு வந்திருக்கின்றன. 11.9% இறங்கிய ஜே.எம். லார்ஜ் கேப் ஃபண்ட் 4 மாதங்களில் மீண்டு வந்துள்ளது. 18% இறங்கிய ஆக்ஸிஸ் மிட் கேப் ஃபண்ட் 4 மாதங்களிலும் 16.1% இறங்கிய பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 3 மாதங்களிலும் மீண்டு வந்துள்ளன.
இதற்கு நேர்மாறாக அதிகமாக இறங்கிய ஃபண்டுகள் மீண்டு வர அதிக காலம் எடுத்துள்ளன. 32.3% வீழ்ச்சிக் கண்ட நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் மீண்டு வர 9 மாதம் எடுத்துக் கொண்டுள்ளது. இதேபோல் 32% சரிவை சந்தித்த ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மிட் கேப் ஃபண்ட் 6 மாதங்களிலும் 34.3% வீழ்ச்சிக் கண்ட ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஸ்மால் கேப், 7 மாதங்களில் மீண்டு வந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் சந்தை இறக்கத்தின் போது எப்படி ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
பொதுவாக, பங்குச் சந்தை இறக்கத்தின் போது அதை விட குறைவாக வீழ்ச்சி காண்பதும் சந்தை ஏறும் போது அதை விட வேகமாக ஏறும் ஈக்விட்டி ஃபண்டுகளை நல்ல ஃபண்டுகள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் ஆகியவற்றின் அடிப்படையில் ஃபண்டுகளை தேர்வு செய்வது நல்லது.
வீழ்ச்சி நிரந்தரம் அல்ல..!
மேலும், சந்தை இறக்கத்தால் ஈக்விட்டி ஃபண்டுகளில் ஏற்படும் வீழ்ச்சி என்பது நிரந்தரமானது இல்லை. அது தற்காலிகமானதுதான். ஒருவர் தனிப்பட்ட பங்குகளை வாங்கி இருக்கும்பட்சத்தில் அவை சந்தை வீழ்ச்சியால் விலை இறக்கம் கண்டிருக்கும்பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளை விட மீண்டு வர அதிக காலம் எடுக்கும். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போன்ற பங்குகளில் இறக்கத்தில் முதலீடு செய்யும் போது மீண்டு வர மிக அதிக காலம் எடுக்க கூடும்.
ஈக்விட்டி ஃபண்டுகளில் சுமார் 30-80 நிறுவனப் பங்குகளில் பணம் பிரித்து முதலீடு செய்யப்பட்டிருப்பதாலும் புதிய முதலீட்டாளர்களின் முதலீடு, எஸ்.ஐ.பி முதலீடுகள் ஃபண்டுக்கு தொடர்ந்து வரும் என்பதால் இறக்கத்தில் கூடுதல் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைப்பதோடு, ஃபண்டின் மீட்சி பங்குகளை விட வேகமாக நடக்கும் எனலாம். தனிப்பட்ட பங்குகளை ஒருவர் வாங்கி விற்கும் போது, தரகு கட்டணம், குறுகிய கால மூலதன ஆதாய வரி 20% ஆகியவை லாபத்தை குறைத்து விடும். மியூச்சுவல் ஃபண்டில் ஃபண்ட் நிறுவனமே பங்குகளை வாங்கி விற்பதால் அதற்கு இந்தச் செலவுகள் அதிகம் கிடையாது. ஃபண்ட் நிறுவனங்களுக்கு தரகு கட்டணம் மிகக் குறைவாக இருக்கும். மேலும். அவை பங்குகளை வாங்கி விற்பதற்கு மூலதன ஆதாய வரிக் கட்ட வேண்டியதில்லை.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு வீழ்ச்சி என்பது நீண்ட காலத்தில் மீண்டு வந்து விடுகிறது என்பது வரலாறு சொல்லும் தகவல் ஆகும். எனவே, சந்தை இறக்கத்தில் பொறுமையில்லாமல் யூனிட்களை விற்க கூடாது. வேகமாக மீட்சி அடையும் நல்ல ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்டுகளில் அந்தக் கால கட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அதிக மீட்சி காலத்துக்கு பொறுமை காக்க தயார் என்பவர்கள் அதிகமாக வீழ்ச்சி அடையும் ஈக்விட்டி ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்; நீண்ட காலத்தில் நல்ல லாபம் பெற முடியும்.
இந்த விஷயத்தில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நிதி ஆலோசகர்களின் உதவியை பெற தயங்க கூடாது.